Sunday, October 30, 2011

உங்களை உருவாக்கியதற்காக இந்த சமுதாயத்திற்கு பட்ட கடனை உங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதில் தீர்க்கலாம். அதற்கு முதலில் உங்களுக்கு நீங்களே தந்த நல்ல உறுத

01. நாம் உண்மையாக வாழ்ந்தால் உண்மையாக பார்க்கலாம்.. உங்களை வலியுறுத்துங்கள், ஒருபோதும் பிரதி எடுக்காதீர்கள். உங்கள் மனதின் நேர்மையைத் தவிர புனிதமானது வேறில்லை. நேர்மையும், நேர்மையோடு கூடிய தைரியத்தையும் தவிர உலகில் உயர்ந்தது வேறென்ன இருக்கப்போகிறது.
02. உங்களைத்தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தரமுடியாது. கொள்கைகளின் வெற்றி தவிர வேறு எதுவும் உங்களுக்கு திருப்திதர முடியாது.
03. தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து வாழும் வாழ்வே சந்தோஷமானது. அப்போதுதான் நீங்கள் யாரென்பதை உங்களாலேயே அறிய முடியும். மற்றவரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி.
04. மனிதன் செல்லக்கூடிய எல்லாப் பாதைகளிலும் ஒரு சமயத்தில் ஒரு பாதை மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
05. இயல்பாக எப்பொழுதெல்லாம் இருக்கிறீர்களோ, அப்படியே தொடர்ந்து இருங்கள். உங்கள் திறமையை விட்டுவிடாதீர்கள். இயற்கை உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அப்படியே இருங்கள், வெற்றி பெறுவீர்கள்.
06. தன்னை ஒரு மனிதன் உண்மையாக கையாள முடியாவிட்டால் அவனால் ஒருபோதும் உயர்ந்த விஷயங்களை கையாள முடியாது.
07. ஒரு மனிதன் தன் கூட்டாளிகளுடன் கூடவே ஒத்திசைந்து செல்லாவிட்டால் ஒருவேளை அவன் வேறு தாளத்தைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். எனினும் அவன் கேட்கும் இசைக்கேற்ப அவன் நடக்கட்டும். எவ்வளவு கச்சிதமாக இருந்தாலும், விலகி இருந்தாலும் சரி. அவன் அவனாகவே இருப்பதே நல்லது.
08. உங்களை உருவாக்கியதற்காக இந்த சமுதாயத்திற்கு பட்ட கடனை உங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதில் தீர்க்கலாம். அதற்கு முதலில் உங்களுக்கு நீங்களே தந்த நல்ல உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்.
09. ஒருவர் மருத்துவராக வருவது மேன்மைக்குரிய விடயமல்ல, மருத்துவப் பணியில் நேர்மையும், நன்னடத்தையும், தனிமனித ஒழுக்கமும் மிக முக்கியம். ஒருவருடைய ஒழுக்கம் தரமாக இருந்தால் சமுதாயத்திற்கு அந்த வாழ்வே சிறந்த மருத்துவம் என்பதை உணராதவர்கள் மருத்துவர் பட்டங்களை சுமப்பதில் யாதொரு பயனும் இல்லை.
10. மருத்துவத்தொழிலில் தனிமனித ஒழுக்கத்தின் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று ஹிப்போகிரட்டீஸ் தெரிவிக்கிறார். அறிவும் திறமையும் மருத்துவனுக்கு இருந்தால் மட்டும் போதாது. மருத்துவம் வளர வேண்டுமானால் மருத்துவன் உயர்தர நம்பிக்கை நாணயத்தை பின்பற்றியாக வேண்டும்.
11. மருத்துவர் பதவியை ஏற்கும்போது உலகில் உள்ள ஒவ்வொரு வைத்தியரும் ஏற்கும் உறுதிமொழி வருமாறு : ( பிள்ளைகள் மருத்துவராக வரவேண்டும் என்று கனவு காணும் ஒவ்வொரு பெற்றோரும் முதலில் தமது பிள்ளைகளை கீழேயுள்ள உறுதி மொழிக்கு தகுதியானவாராக உருவாக்க வேண்டும் )
நான் மிகவும் புனிதமானதாக நினைப்பதன் மேல் பயபக்தியோடு உறுதி கூறுகிறேன்.
மருத்துவத் தொழிலுக்கு நான் விசுவாசமாக இருப்பேன். அதன் உறுப்பினர்களிடம் நேர்மையாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்வேன்.
நேர்மையுடன் பெருமையுடன் என் தொழிலைப் பயில்வேன், என் வாழ்வை வாழ்வேன்.
எந்த வீட்டில் நான் நுழைந்தாலும், என் சக்திக்கு உட்பட்டவரை நோயாளிகளின் நன்மைக்காகத்தான் பாடுபடுவேன். தவறு செய்யாமல், நேர்மையற்று நடக்காமல், மற்ற தீய நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பேன்.
என்னுடைய திறமையை நோயாளிகளைக் குணப்படுத்தத்தான் பயன்படுத்துவேன். சட்டத்திற்கு விரோதமான காரியங்களுக்காக மருந்து தரமாட்டேன். அறுவைச் சிகிச்சைக்கு அவசரப்பட்டு ஆலோசனை தரமாட்டேன்.
மனிதரின் வாழ்வைப்பற்றி சொல்லத் தகாதவற்றை நான் பார்த்தாலோ கேட்டாலோ அதை இரகசியமாகப் பாதுகாப்பேன். இந்தச் சத்தியத்தை மீறி நடந்தால் வாழ்வில் எல்லாமே எதிர்மறையாகும் என்பதை உணர்கிறேன். தகவல் : ஹிப்போகிரட்டீசின் மருத்துவர்களுக்கான உறுதிமொழித் தொகுப்பிலிருந்து…
12. என்னை விடுதலை செய்யுங்கள் அல்லது தண்டனை வழங்குங்கள். ஆனால் நான் என் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்பதை மட்டும் உறுதியோடு தெரிந்து கொள்ளுங்கள். நான் பலமுறை இறந்தாலும் பரவாயில்லை – சாக்கிரட்டீஸ்
13. ஆணிற்கும், பெண்ணிற்கும் நற்பெயர்தான் ஆன்மாவின் அணிகலன்களாகும். என் பணப்பையை திருடுவபவன் குப்பையைத் திருடுகிறான், அது உபயோகமற்றது. அது என்னுடையதாயிருந்தது, அவனுடையதாயிருந்தது, ஆயிரக்கணக்கானவரின் அடிமையாய் இருந்தது. என் நற்பெயரை திருடியவன் அதன் மூலம் பணக்காரனாவதில்லை. – சாக்கிரட்டீஸ்
14. நேர்மையான ஒரு மனிதனே கடவுளின் உன்னதப்படைப்பு.
15. நற்பெயர் கொண்டவர்கள், பொய் பேசாதவர்கள், தந்திரமான வார்த்தைகளுக்கு எடுபடாமல் இருப்பவர்கள், மக்களுக்கான கடமையிலும், தனிமனித சிந்தனையிலும் உயர்வாக உள்ளவர்கள் பனியை விலத்தும் சூரியனாக பிரகாசிக்கும் சமுதாயப் பகலவன்கள்.
16. இந்த அமெரிக்க அதிபர் பதவியை நான் எப்படி நடாத்த விரும்புகிறேன் என்றால், இந்தப் பதவியை விட்டு விலகும் சமயத்தில், உலகில் உள்ள எல்லா நண்பர்களையும் இழந்துவிட்டாலும், ஒரேயொரு நண்பனாவது இருப்பான் அவன் என்னுள்ளேயே இருப்பான். – ஆபிராகம் இலிங்கன்.
17. அன்பு, சுயநலமற்ற தன்மை, அடுத்தவர் நலன் பேணுதல் போன்றவை எப்போதுமே முக்கியமான குணங்களாக மதிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் அவனுடைய ஒட்டு மொத்தமான குணங்களோடு சேர்த்தே மதிக்கப்படுகிறான். இதை மிகவும் அவதானமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
18. மற்றவர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை நீயே அவர்களுக்கு முதலில் செய். ஒரு நண்பனைப் பெற ஒரே வழி நீயும் நண்பனாக இருப்பதுதான்.
19. அன்பு, தருமம், மற்றவர்களுக்கு சேவை செய்தல் இவைகள்தாம் மனிதனின் அடிப்படைக் குணங்கள். அன்பு எப்போதும் தோற்பதில்லை. நம்பிக்கை, விசுவாசம், அன்பு ஆகிய மூன்றில் உயர்ந்தது அன்புதான்.
20. அன்பு இல்லாதவர்கள் வானத்தில் உள்ள தேவர்களின் மொழியில் பேசினாலும் அந்தப் பேச்சு உயிரற்ற ஜால்ராவாகத்தான் இருக்கும்.
21. நாம் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், வல்லமை உள்ளவராக இருந்தாலும் அன்பு இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.
22. மொழிகள் அழியலாம் : அறிவு மறைந்து போகலாம் ஆனால் அன்பு எப்போதுமே அழிவதில்லை.
23. அன்பு தகாதசெயலில் ஈடுபடாது, தனக்காக எதையும் செய்யாது, எளிதில் உணர்ச்சிவசப்படாது, தீயதை எண்ணாது. அநீதி செய்துவிட்டு சந்தோஷப்படுவது குற்றம், உண்மையைப் பார்த்து சந்தோஷப்படுவதே மேன்மையானது.
24. தேடிக் கொண்டு சென்று பாதி விடயங்களை அறிந்தால் மீதி தெரியும். மேலும் முழுமையானது வந்துவிட்டால் பாதி மறைந்துவிடும்.
25. இறக்கவோ கொல்லப்படவோ முன்னர் உன்னால் முடிந்ததை ( நல்லதை ) எல்லாம் செய்துவிட்டு உன் கையில் உள்ள விளக்கை மற்றவரிடம் ஒப்படைத்துவிடு.
26. தன் சக மனிதனை நேசிக்காதவர்கள் உபயோகமற்ற வாழ்வை வாழ்கிறார்கள்.
27. தரும்போதுதான் நாம் பெறுகிறோம் : மன்னிப்பதால்தான் மன்னிக்கப்படுகிறோம்
28. தன் சக மனிதர்களை நேசிக்காதவர்கள் உபயோகமற்ற வாழ்வை வாழ்கிறார்கள்.
29. வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு செலுத்துங்கள் : சந்தேகம் உள்ள இடத்தில் நம்பிக்கை கொடுங்கள் : மனச்சோர்வு உள்ள இடத்தில் விசுவாசம் கொடுங்கள் : இருள் உள்ள இடத்தில் வெளிச்சம் கொடுங்கள் : துக்கம் உள்ள இடத்தில் சந்தோசம் கொடுங்கள்.

அலைகள்
Written by Thurai

தலை சிறந்த தத்துவங்கள்…

01. வாழ்வில் நமக்கு பலமுறை இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும், சில சமயம் பத்தாவது வாய்ப்புக் கூட கிடைக்கும், வாய்ப்பை இழந்துவிட்டோமென்று யாருமே நம்பிக்கை இழக்க வேண்டாம்.
02. வாழ்வின் இனிமையான பாகம் இனி தான் வரவிருக்கிறது, எப்போதுமே இனி தான்.. இது தனது 95 வது பிறந்த நாளில் நீதிபதி சர். எம். மல்லாக் கூறியது.
03. நான் இன்னும் வேலை செய்கிறேன். என் கைகள் கலப்பையிலும் என் முகம் எதிர் காலத்திலும் இருக்கிறது. மாலை நிழல் நீளுகிறது ஆனால் காலை என் இதயத்தில் இருக்கிறது.
04. முன்னேற்றம் என்ற கோடு உங்களுக்கு பின்னால் போய்விடவில்லை. அது இன்னமும் உங்களுக்கு முன்னாலேயே கிடக்கிறது கலங்க வேண்டாம்.
05. கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
06. வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.
07. இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது.
08. வயது என்பது மனதின் தன்மை உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்
நம்பிக்கை இழந்து விட்டால் எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்
உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால் நீங்கள் வயதானவர்தான்.
ஆனால் வாழ்வில் இருந்து சிதைந்ததை நீங்கள் எடுத்து விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால் அன்பாக இருந்தால் எவ்வளவு வருடங்கள் கடந்தாலும் எத்தனை பிறந்த நாள் போனாலும் உங்களுக்கு வயதாவதில்லை.
09. சந்தோஷத்தை தேடுபவர்களுக்கு மூன்று முக்கிய தேவைகள் உண்டு. அ. சுய அடையாளம் காணல் ஆ. சுய வழிகாட்டல் இ. சுய வெளிப்பாடு. வாழ்வு நாற்பது வயதில் தொடங்குகிறது சில சமயங்களில் அது அறுபது வயதுக்குப் பிறகுதான் உண்மையாகவே தொடங்குகிறது. ஆகவேதான் ஒவ்வொருவரும் முடி நரைக்கும் காலத்திலாவது தமது சுய வெளிப்பாட்டைக் காட்ட வேண்டும்.
10. நமது புருவங்களில் சுருக்கம் ஏற்படலாம். இதயத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது மனதிற்கு வயதாகக் கூடாது.
11. உங்கள் நரை முடி குறித்து வெட்கப்படாதீர்கள் அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள். ஏனென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் புவியில் இறந்துவிட்டார்கள். இதைப் பார்க்கும்வரை உங்களுக்கு வாழக் கிடைத்தது எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.
12. மூளை நன்கு வளர்ந்து மூளையில் உள்ள வெண்ணிற செல்கள் நரை முடியாக வெளியே வருகின்றன அது பெருமைக்குரியதே.
13. இளமை என்பது வாழ்வின் பாகமல்ல அது ஒரு மனோநிலை. இளமை என்றால் பயத்தை தைரியம் வெற்றி கொள்ளும் மனோநிலை.
14. வருடங்களை கடப்பதால் ஒருவனுக்கு வயதாவதில்லை. தங்கள் இலட்சியங்களை துறப்பதால்தான் ஒருவனுக்கு வயதாகிறது.
15. உங்கள் நம்பிக்கையைப் போலவே இளையவராக இருக்கிறீர்கள், சந்தேகத்தைப் போலவே முதியவராக இருக்கிறீர்கள், தன்னம்பிக்கையைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள், பயத்தைப் போலவே முதியவராக இருக்கிறீர்கள், விசுவாசத்தைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள்.
16. முதுமை என்பது எப்போதுமே உங்களை விட 15 வயது அதிகமாக இருப்பது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
17. ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.
18. வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.
19. உன்னிடம் எந்தத் திறமை இருந்தாலும் முட்டாளிடமிருந்து உன்னைப் பிரிக்கும் தெய்விக பொறியை வரவேற்று அதை வளர்த்துக் கொள். ஆனால் உன் வாழ்வின் குறிக்கோளாக உலக வெற்றியை கருதாதே.
20. வழி நீண்டதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம் ஆனால் போராட்டத்தையும், வலியையும் வரவேற்பாயாக. ஏனெனின் வாழ்வின் வலியில் இருந்துதான் ஞானமும், புரிதலும் வருகின்றன.
21. வலியை கற்றுக்கொள் கணக்கிடாதே..! வேதனையை எதிர் கொள் எதிர்க்காதே.
22. கடவுளின் சரியான திட்டப்படிதான் முழு வாழ்வும் இருக்கிறது. முழுவதும் பார், முழு வடிவமைப்பையும் பார். வாழ்வதும் கற்பதும் எவ்வளவு இனிமை எண்ணிப்பார்.
23.சாம்பலை விட்டுவிடு நெருப்பில் தங்கம்தான் மிஞ்சுகிறது.
24. புயலுக்கு பறவை சாயாமல் சரி செய்வதைப்போல காலப் புயலில் உன்னை சரி செய்து கொள் பயத்தை நீக்கு வாழ்க்கைக் கப்பலை நேராக செலுத்து கப்பலுக்கு ஏற்ற துறைமுகம் அருகே வந்துவிட்டது ஒவ்வொரு அலையும் சந்தோஷத்தில்….
25.வாழ்வை எண்ணத்தாலும் செயலாலும் அளக்க வேண்டும், காலத்தால் அல்ல.
26. உனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழந்துவிடாதே.. ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு.
27. ஒவ்வொரு வருடமாக வாழ்வை வாழ்..எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன் இரு இலட்சியத்தை விட்டு விலகாதே பயணம் கரடு முரடாக அல்லது வழுவழுப்பாக இருக்கட்டும் நீ மட்டும் சந்தோஷத்தை இழந்துவிடாதே.
28. ஒவ்வொரு பெரிய போராட்டம் அல்லது தோல்வி இவற்றிலிருந்து ஒரு புதிய விடியல், வாழ்வின் முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த அலை மனிதனை மேலும் மேலும் உயர்த்தியே வருகிறது.
அலைகளுக்காக - Written by Thurai ·

Thursday, October 27, 2011

மனைவியை மகிழ்விப்பது எப்படி? குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

அழகிய வரவேற்பு

•வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

•மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள்.ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட.
அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.

•வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

•நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

•உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

•தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

•மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்

•மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

•நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

•நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும்

•நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

•ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

•இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

•இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ.

•வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.

• கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை

•குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.

•அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)

•மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

•மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.

•ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது.

•மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).

•அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

•அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது

•மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.

•உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

•நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

•குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.

•நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

•முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

•திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

•எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).

•பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

பொருளாதார உதவி

•கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).

•அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

•அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

அழகும் நறுமணமும்

•நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

•எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

•அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம்

•மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).

•பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

•இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

•காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

•அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

•அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

•மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

•பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.

•மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

•அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இரகசியங்களைப் பாதுகாத்தல்

•படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது

•தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

•உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

•காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.

•இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

•ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

•மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

•அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

•உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

•அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

•பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

•உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.

இஸ்லாமியப் பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

•இஸ்லாத்தின் அடிப்படை

•அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்

•படித்தல் மற்றும் எழுதுதல்

•இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது

•பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்

•வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை

•வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.

•மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

•அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது. (உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்).

•அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

•நீங்கள் அருகில் இல்லாததால், தொலைப்பேசிக்கு பதில் அளித்ததற்காக கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

பொறுமையும் சாந்தமும்

•மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.

•இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். (உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை).

•உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்

•முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

•அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.

•அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

•மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

•மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.

•குர்ஆனில் (4-வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

•காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
•செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.

மன்னிப்பும் கண்டிப்பும்

•பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

•உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

•தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).

•எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

•சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

•தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

•அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

•பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.

•மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

(உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!)
Source : http://www.islamkalvi.com/portal/?p=5003

Monday, October 24, 2011

எந்த நாட்டின் நேரத்தையும் ஏன் எந்த ஊரின் நேரத்தையும் ஒரு நொடியில் கண்டுபிடிக்கலாம்

எந்த நாட்டின் நேரத்தையும் ஏன் எந்த ஊரின் நேரத்தையும் ஒரு நொடியில் http://www.timezonecheck.com/கண்டுபிடிக்கலாம் வாருங்கள்
இந்தலிங்கை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான நாடு அல்லது ஊரின் பெயரை கொடுக்கவும். பயனுள்ள இணையத்தளம். மறக்காமல் உங்களுடைய இமெயில் முகவரியை தொடைபு கொள்ளும் பகுதியில் மறக்காமல் பதியவும்.
நன்றி வஸ்ஸலாம்.

அழகு தமிழில் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் விடியோ உரையை கேட்டு மகிழலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இஸ்லாத்தை அழகிய முறையில் உலகம் முழுவதும் எடுத்துரைத்து பணி செய்துவரும் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் விடியோ உரையை சகோதரர் ஒருவர் அழகு தமிழில் டப்பிங் செய்துள்ளார். இதனை தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் கேட்டு பயனடைவீர்களாக மேலும் உங்களுக்கு தெரிந்த மாற்றுமத நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.
நன்றி வஸ்ஸலாம்.
அதற்கான லிங்க் : http://www.youtube.com/user/lptdeen

கிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்...!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com



நம் நாட்டில், அரசு வேலைக்குப் பலரும் போட்டி போட காரணமே, நோவாமல் நோம்பு எடுக்கலாம் என்ற சட்ட விழிப்பறிவுணர்வு இன்மைதான்.

அரசுப் பணிக்கு வருபவர்களுக்கு என்னென்ன சட்டக் கடமைகள் இருக்கின்றன, அக்கடமையை ஆற்றாமல் போனால் ஏற்படும் விளைவுகளுக்கு, சட்டப்படி எப்படியெல்லாம் பொறுப்பாக்கப்படுவோம்; நோண்டி நொங்கெடுக்கப் படுவோம்; தண்டிக்கப்படுவோம் எனத் தெளிவாக தெளிந்தால், நிச்சயமாக ஒருவர்கூட அரசுப் பணிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.

ஆனாலும், விரும்பி வருவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களின் சட்ட அறியாமை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், நமக்கென பணியாற்றக்கூடிய அவ்வரசு ஊழியர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என மக்களாகிய நமக்கும் தெரிவதில்லை என்பது, அனைத்து விதத்திலும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இத்தோடு, அரசு அலுவலர்கள் என்றால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாத அசுர பலம் மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களின் அடிமனதில் பதிந்து கிடக்கிறது.

உண்மையில் அவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால், நமக்கான பணிகளைச் செவ்வனே செய்வதற்காக, நமது வரிப்பணத்தில் இருந்து, ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்களே என்பதால், அவர்களை அலுவலர்கள், அதிகாரிகள் என்ற ஆங்கிலேயர் காலத்து பட்டப் பெயர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுவதே, சொல்வதே, அழைப்பதே, எழுதுவதே ஜனநாயகத்தில் மிகவும் சரியானது.

நமது வேலைக்காக நம்மால் பணியமர்த்தப்படும் வேலைக்காரர் செய்யும் வேலையில் அவரைவிட நமக்கு நல்ல பரிச்சயம் இருந்தால் தானே, அவர் செய்த வேலையில் குற்றம் குறைகளைக் கண்டறிந்து, குறைகளைக் களையெடுக்கவும், கற்பிக்கவும் முடியும். அப்படியில்லாத போது, அவ்வேலைக்காரர் என்ன செய்கிறாரோ, சொல்கிறாரோ அதுவே சரியானது என்பதைத்தானே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்?

இன்று இப்படித்தானே நமது நிலைமை இருக்கிறது!?

நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், அரசு ஊழியர்கள் தங்களின் கடமைகளைச் சரியாக செய்யாததுதான் என்று சொன்னால், சற்றும் மிகையல்ல; சாலப் பொருந்தும்.

நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்று சொல்லாடல், சொல் அளவில் கையாளப்படுகிறதே ஒழிய, செயல் அளவில் அத்தகைய கிராமங்களில் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்களும், அக்கிராமங்களில் வாழும் நாமும் செலுத்துவதில்லை என்பதே உண்மை.

மக்களின் நல்வாழ்விலும், குற்றங்களைத் தடுப்பதிலும், காவல் நிலைய ஊழியர்களை விட, கிராம நிர்வாக ஊழியர்களே அதிக அக்கரை உள்ளவர்கள்/செலுத்த வேண்டியவர்கள். அதனால்தான், ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராம நிர்வாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், காவல் நிலையங்ளோ பல கிராமங்களுக்கு ஒன்று என்ற அளவிலேயே இயங்குகிறது என்பதன் மூலம் கிராம நிர்வாகத்தின் அதிமுக்கியத்துவத்தை, எவரும் எளிதாக எடை போட்டு விடலாம்.

கிராமம் என்பது, நாம் எல்லோரும் மனதளவில் நினைப்பது போல குக்கிராமங்கள் மட்டுமே அல்ல. மாறாக, குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் கிராமங்களாக வரையறை செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்தையும் சரியான முறையில் பராமரிக்க வழிகாட்டும் வகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல் என இரண்டு தொகுதிகள் (பாகங்கள்) உள்ளன".

முதல் தொகுதியில் காவல் கடமை, நிலவரி வசூல், பல்வகைப்பட்டவை, மக்கள் நல்வாழ்வு மற்றும் துப்புரவு, கொள்ளை நோய்கள் மற்றும் இதர நோய்கள், நச்சுக்கடி மற்றும் கொட்டுதல், நஞ்சிடுதல் மற்றும் தற்செயலாக நிகழும் விபத்து ஆகியவற்றைக் கையாள வேண்டிய விதம் குறித்த அறிவுறுத்தலும், இவ்வறிவுறுத்தல்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான உரிய படிவங்களை இரண்டாவது தொகுதியிலும் அரசு தொகுத்துள்ளது.

ஆனால், இந்த இவ்விரு தொகுதி நூல்களையுமே, தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு அச்சிட்டு விற்பனை செய்யவில்லை என்பதால், தற்போது பணியில் உள்ள கிராம நிர்வாக ஊழியர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களிடம் இல்லைவே இல்லை என்று சொல்வதை விட இப்படியொரு நடைமுறை நூல் இருக்கிறதா என என்னிடம், கேட்ட ஊழியர்களே அதிகம்.

அப்படி கேட்டவர்களுக்கெல்லாம் நகல் பிரதி எடுத்துக் கொடுத்து வந்தோம். தற்போது, இந்நூல் நம் குடிமக்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மிகுந்த சிரமத்திற்கு இடையில், பொது மக்களின் நலன் கருதி முதல் தொகுதியை மட்டும் நூலாகவே வெளியிட்டு உள்ளோம். இந்த முதல் தொகுதியை ரூ-225 நன்கொடை செலுத்தி பெற விரும்புவோர் திரு.பாண்டியக்குமார் +919789176830 அல்லது திரு.அய்யப்பன் +919150109189 என்கிற உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நூலின் ஒரு பிரதியாவது நமக்கு கிடைக்காதா என தேடிக் கண்டுபிடிக்கவே எனக்கு சுமார் மூன்று வருடம் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அந்த அளவிற்கு இப்புத்தகம் குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. அப்படி தெரிந்தவர்கள் ரகசியம் காப்பது போல யார் கண்ணிற்கும் புலப்படாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இதன்படி, கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர், கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசின் பிரதிநிதியாக முழு நேர காவல் ஊழியம் உட்பட பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியவர். மற்ற மூவரும் பகுதி நேர ஊழியர்கள் ஆவர். தஞ்சைப் போன்ற நெல் பயிரிடும் டெல்டா மாவட்டங்களில் பாசனக் காவலரை, தலையாரி என்பர்.

கிராமத்தின் மக்கள் தொகை, வருமானம், பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடுதலாக அல்லது குறைவாகவே இருக்கும்.

பொதுவாக ஒரு கிராமம் முதல் ஓரிரு கிராமங்கள் வரை, ஒரேயொரு கிராம நிர்வாக ஊழியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கிராம நிர்வாக ஊழியரின் ஆலோசனைப்படி, தாம் நியமிக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்யக் கடமைப்பட்டவர்களே தவிர, அவரின் வீட்டு வேலைகளைச் செய்ய கடன்பட்டவர் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில் இவர்கள் கடனைக் கடமையாகவும், கடமையைக் கடனாகவும் செய்பவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்தான்.

கிராம நிர்வாக ஊழியர் என்றால், நினைத்த போது வேலைக்கு வருவதும், போவதும் பொது மக்களில் எவராவது சான்றிதழ் கேட்டு வந்தால், அதிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள லஞ்சத்தைக் கவனிக்க வேண்டியதைக் கவனித்தால் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுத் தருவது மட்டுமே பிரதானப் பணி என்கிற அளவிற்கு மிகவும் உயர்வானதொரு கடமைப் பணியை, மிகக் கீழ்த்தரமான கடமைப் பணியாக மாற்றி விட்டார்கள்.

இதற்கு மேலும், இவர்களை இப்படியே விட்டு வைக்காமல், குடிமக்களாகிய நாம்தான் நமக்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் நோக்கத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இனியும் நாம் இக்கடமையைச் செய்யத் தவறினால், நம் வீடு மட்டுமல்ல; நாடே நாசமாகி விடும்.

முழு நேர ஊழியர்களான கிராம நிர்வாக ஊழியர்களுக்கு, தமது ஊழிய வரம்புக்குள் எவ்வித குற்றமும் நடைபெறாமல் தடுப்பது, கிராமத்தில் நடமாடும் கொள்ளைக் கூட்டத்தினர், தப்பி வந்த கைதிகள், சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்லது பொருள் தயாரிப்பில் ஈடுபடுவோர், மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்களைப் பற்றி தெரிய வரும் போது அவர்களைப் பற்றி விசாரணை செய்வது, தேவைப்பட்டால் காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கும் தகவல் அளிப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது காவல் கடமையாகவும்,

திடீர் மரணங்கள், அசாதாரண மரணங்கள், விபத்து மரணங்கள், விமான விபத்துக்கள் ஆகியவை நிகழும் போது உடனே அங்குச் சென்று அதற்கான காரணங்களை ஆராய்வது, பைத்தியக்காரர்கள் அல்லது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோரைத் தம் பாதுகாப்பில் கொண்டு வருவது இதுபற்றி காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் தேவைப்பட்டால் தகவலை அளிப்பது பாதுகாப்பு கடமையாகவும்,

தான் ஊழியம் ஆற்றும் கிராமத்தில் நடக்க இருக்கின்ற திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், தகாத சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும் பதினைந்து நாட்கள் முன்பாகவே அது குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு அளிப்பது ஆகியன பாதுகாப்பை நிலைநிறுத்தும் கடமையாகவும்,

நீர் நில வரி வசூல், ஆக்கிரமிப்பு, பட்டா பதிவு, கிணறுகள், ஓடைகள், ஏரிகள் அரசு பொது கட்டிடங்கள், புராதன கட்டிடங்கள், புதையல்கள், கனிம வளங்கள், இதர அரசாங்கச் சொத்துக்கள், ஊராட்சி நிதிகள், கால்நடை பட்டிகள் & நோய்கள், பிறப்பு & இறப்பு புள்ளி விபரங்கள், இயற்கை இடற்பாடுகளால் ஏற்படும் போக்குவரத்து தடையை நீக்குதல், எடை அளவுகளை ஆய்வு செய்தல், அஞ்சல் துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குதல் உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் பல்வகை கடமையாகவும்,

தண்ணீர், கழிப்பிட பராமரிப்பு, குப்பை மேடுகள், இடுகாடுகள் & சுடுகாடுகள், இறந்த விலங்குகள், வாந்தி பேதி, மஞ்சல் காமாலை, மூளைக்காய்ச்சல், பிளேக், மலேரியா, வெறி நாய் கடி, பாம்புக்கடி, தேள் கொட்டுதல் உட்பட பல்வேறு விடயங்களைச் செம்மைப் படுத்துவது ஆகியன மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராம துப்புரவு கடமைகளாக, கிராம நிர்வாக ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டே, "கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒருவேளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களுக்கு, நிர்வாக ஊழியராக நியமிக்கப்படும் போது, அதில் ஏதாவதொரு கிராமத்தில் வசிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் 01-01-2011 தேதிய கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 12,620 கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் பத்து சதவிகித கிராம நிர்வாக ஊழியர்கள் கூட அவர்களின் பொறுப்பு கிராமங்களில் வசிப்பதில்லை. கிராமத்தில் வசிக்க வேண்டியவர்கள் நகரத்தில் வசிக்கிறார்கள் என்றால், நகரத்தில் பணியாற்றுபவர்கள் கூட தங்களின் வசதிக்காக அடுத்தடுத்த நகரங்களிலும் வசிக்கும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு அடிப்படை காரணமாக, கிராமத்தில் போதிய வசதியில்லை என்ற அற்ப காரணத்தையே பலரும் முன் வைக்கின்றனர். அப்படியானால், அக்கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் சராசரி மக்கள் இல்லையா? பணி நியமன ஆணையைப் பெற்ற போது கிராமத்தில் தங்களுக்குப் போதிய வசதி கிடைக்காது என்பது தெரியாத அப்பாவிகளா இவர்கள்? ஒரு பேச்சுக்குத் தெரியாமல்தான் சேர்ந்தார்கள் என்றாலும் கூட, தெரிந்த பின் இந்த வேலை நமக்கு ஒத்து வராது என்று பணியை துறந்துவிட்டு வேறு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே?

இதற்கு வக்கில்லாதவர்கள், எப்படிப்பட்ட கிராமமாக இருந்தாலும் அங்கே தானே தங்கி ஊழியம் ஆற்ற வேண்டும்? மக்களின் வேலைக்காரர்களான இவர்களின் கூற்று, "சாமியே சைக்கிள்ல போகுதாம்; பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்!" என்ற கதையாகத்தான் இருக்கிறது.

இவர்களை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்ட ஆட்சியர்கள் கூட, தாங்கள் எல்லாம் அரசு என்னும் ஒரு சாதி ஊழியர்கள் என்ற அடிப்படையிலும், தனது கையாலாகாத்தனத்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இந்நூலின் பிரிவு 43-இல் கிராம நிர்வாக ஊழியர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமான அறிவிப்பை எப்படி சார்பு (சேர்க்க) வேண்டும், அதற்கு அவர் எப்படி பதில் அளிக்க வேண்டும், அவர் மீதான வழக்கிற்கு அரசு ஆதரவு தருமா? என்பன போன்று குடிமக்கள் நடவடிக்கை எடுக்க தேவையான பல விடயங்கள் அடங்கியுள்ளன.

உங்களுக்கு ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்:

ஓர் அரசு ஊழியர் தனக்கு தெரியாமல் தவறு ஏதும் செய்து விடக்கூடாது என்பதில் சட்டம் தெளிவாகவே இருக்கிறது. ஆனால், இந்தத் தெளிவு அரசு ஊழியர்கள் எவருக்குமே இருப்பதில்லை. நான் இப்படிச் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என உங்களுக்குத் தெரிந்த அரசு ஊழியர்களிடமே உண்மையாக கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைத்த தகவலை மறக்காமல், இக்கட்டுரைக்கான பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.

அதாவது ஒரு அரசு ஊழியர் செய்த தவறுக்காக அவர் மீது சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை நாம் அனுப்பினால், அதற்கு அவர் பதில் தர வேண்டும் என்றுதானே நினைப்போம். இது ஓரளவுக்குத்தான் சரி. பதில் கொடுப்பதில்தான் அவர்களுக்கு சிக்கலே இருக்கிறது. ஏனெனில், அவர்கள் நேரடியாக நமக்கு பதில் கொடுக்க முடியாது. மாறாக, நமது சட்டப்படியான அறிவிப்பையும், அதற்கு நமக்கு என்ன பதில் கொடுக்க வேண்டுமோ அதையும் எழுதி தனது மேல்நிலை ஊழியருக்கு உரிய முகப்பு கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். அதனைப் பெற்ற அந்த மேல்நிலை ஊழியர் அப்பதிலில் தேவையான திருத்தங்களைச் செய்து, மேலொப்பமிட்டுதான் நமக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், இச்சட்ட விபரம் அரசு ஊழியர்கள் எவருக்குமே தெரிவதில்லை. ஆதலால், நேரடியாகவே வீரமாகவும், மிரட்டலாகவும் பதில் அனுப்பி, எடுத்த எடுப்பிலேயே வசமாக சிக்கிக் கொள்வார்கள். பின், ஆளை விட்டால் போதும் என காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயங்கமாட்டார்கள் என்பது எனக்கு பல அரசு ஊழியர்களிடம் இருந்து கிடைத்த அனுபவம்.

இந்த ரகசியத்திலும், ரகசியம் என்னவென்றால், இப்படியொரு சூழ்நிலை கீழ்நிலை ஊழியருக்கு நேரும் போது, மேல்நிலை ஊழியர் எந்த விதத்திலும் வக்காலத்து வாங்க முடியாமல் போய் விடும். அப்படி வக்காலத்து வாங்கினால், அவரது மேலதிகாரியிடம் அவர் சிக்க வேண்டியிருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் ஆட்சியராக இருந்த திரு.சகாயம் அவர்கள் சட்டத் தெளிவு உள்ளவர். அவரது அதிரடி சட்ட நடவடிக்கைக்குப் பயந்த கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்க ஆரம்பித்தார்கள். "மேயிற மாட்டை நக்கின மாடு கெடுத்த கதையாக", கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கம் மக்களின் ஆட்சியருக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்ததால், மக்களும் வெகுண்டெழுந்து ஆட்சியரின் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக போராட்ட களத்தில் இறங்கி கிராம நிர்வாக ஊழியர்களையும், அவர்களின் சங்கத்தையும் பணிய வைத்தனர்.

தங்கம் செய்யாத வேலையைச் சங்கம் செய்யும் என்பது, சங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறியாதவர்களின் கூற்று. இன்றைய சங்கங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு (வெகுஜன மக்களுக்கு)ச் சங்கடம் தரும் வேலைகளைத்தான் செய்கிறது.

நம் தாத்தா மகாத்மா காந்தி அவர்கள் கூட, "எந்த நோக்கத்திற்காக சங்கம் தோற்றுவிக்கப் படுகிறதோ, அச்சங்கமே முதலில் அந்நோக்கத்தை கெடுக்கும்" என தென்னாப்பிரிக்க சத்தியாகிரக நூலில் முன்மொழிந்து உள்ளார். எனது ஆய்விலும், இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்த பிறகே, தாத்தாவின் கூற்றை வழிமொழிய கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் ஆட்சியர் இன்று மதுரையை ஆட்சி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நம்பிக்கையோடு அனுப்பப்பட்டு விட்டாலும் கூட, நாமக்கல் மாவட்டத்தில் அவரின் ஊக்கப் பயிற்சியாலும், தங்களின் தன்னார்வத்தாலும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர்கள் பலராலும், கிராம நிர்வாக ஊழியர்கள் இன்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மற்ற மாவட்டங்களில் இப்படிப்பட்ட கண்காணிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.

நமது நாமக்கல் மாவட்டத்தைப் போலவே, அனைத்து மாவட்ட கிராமங்களிலும், கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்கி தங்களின் பணியை ஆற்ற வேண்டும் என்ற நோக்கோடு, அண்மையில் நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையைச் சேர்ந்த திரு.விவேகானந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றதன் மூலம் இந்த விடயத்தைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்துள்ளார்.



இதற்கு மேல், இதனைக் கண்காணித்து முன்னெடுத்துச் செல்லும் கடமை, ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் நம்மைப் போன்ற தன்னார்வலர்களுடைய கடமையே ஆகும். இவ்விடத்தில் இப்படிப்பட்ட கடமை நிகழ்வொன்றை சொல்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கோவை தெலுங்குபாளையம் பகுதியில் பொது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த பின், அதனை வீட்டோடு கூடிய சுற்றுச்சுவர் மூலம் தன்வசப்படுத்தும் முயற்சி நடந்ததை அடுத்து, அப்பகுதியில் வசிக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர் திரு.கண்ணன் என்பவர் அதனைத் தடுக்க கோரி கிராம நிர்வாக ஊழியரிடம் பிரிவு 2-இன்படி மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதாவது இந்தப் பிரிவின்படி, ஒவ்வொரு கிராம நிர்வாக ஊழியரும், தாங்கள் வேலை செய்யும் கிராமத்தில் குற்றம் ஏதும் நடக்காத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும். குற்றம் என்பது குற்றவியல் என்பதால் அதையே உரிமையியலில் பிரச்சினை என நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உங்களுக்கு இப்படி விளக்கிச் சொல்லுவது போல, மனுவில் சொல்வது கிடையாது என்பதால், அவர்கள் என்னமோ, ஏதோ என பயப்படுவார்கள்.

அதைப் படித்துப் பார்த்த அவ்வூழியர், அப்பிரிவின் வில்லங்க விளக்கம் தெரியாததால், கொஞ்சமும் பொறுப்பில்லாமல், இதெல்லாம் என் வேலை கிடையாது. நீங்க நீதிமன்றத்துல கேஸ் போட்டு ஸ்டே வாங்கி தடுத்து நிறுத்திக்குங்கோ என்று கூறி மனுவைத் திருப்பி தந்து விடவே, அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனைக் கேட்டார். மனுவை வாங்க மறுத்ததால் கூரியர் மூலம் சார்பு செய்யப்படுகிறது என மனுவிலேயே குறிப்பு எழுதி அனுப்பி வைக்கச் சொன்னேன். அவரும் அதன்படி செய்து விட்டார்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கெல்லாம் கூரியர் கிடைத்ததோ இல்லையோ, சட்டப்பிரிவு எல்லாம் போட்டு இருக்கிறதால, நமது வேலைக்கு வேட்டு வந்து விடும் என அவ்வூழியர் விழுந்தடித்துக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் ஆஜரானதோடு, இனி இது போன்ற சட்ட விரோத ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடமாட்டேன் என எழுதியும் வாங்கி கொண்டார்.

வேறு வழியில்லாமல் ஆக்கிரமிப்பு ஆசையில் ஏற்கனவே இருந்த இடித்து தள்ளிய வீட்டு சுற்றுச்சுவரை மீண்டும் அதே இடத்தில் கட்டும்படியானது. வேறு வேலையாக திருப்பூர் வரை சென்ற போது, இவ்விடத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்று பார்த்தேன். ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ஒரு பகுதி சுற்றுச்சுவர் மட்டும் புதிதாக எழுப்பப்பட்டு சுண்ணாம்பு கூட அடிக்காமல் காட்சியளித்தது எனக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

சட்ட விழிப்பறிவுணர்வோடு, இப்படி எளிதாக ஒரு நாள் பொழுதிற்குள் காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, தலைமுறை தலைமுறையாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களை என்னவென்று சொல்வது? இதனைப் படிக்கும் நீங்கள்தான் எப்படியெல்லாம் சட்டம் அருமையாக இருக்கிறது என ஊற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் எடுத்துச் சொ(செ)ல்லவும் வேண்டும்.

இப்படி சட்ட விரோத சம்பவங்கள் ஒவ்வொன்றுக்குமே, நாட்டில் ஏதாவதொரு இடத்தில் திட்டம் போட்டுதான் நிறைவேற்றப்படுகின்றது. இதேபோல, திட்டங்களை நிறைவேற்றிய பின், நாட்டின் ஏதாவதொரு இடத்தில்தான் தங்க வேண்டியுள்ளது என்கிற எதார்த்த நிலையில், கிராம நிர்வாக ஊழியர்கள் தத்தமது ஊரிலேயே தங்கி, தங்களுக்குச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றினாலே, சட்ட விரோத செயல்கள் பலவற்றைத் தடுத்து விடலாம்.

இதேபோல், கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிற்கோ அல்லது தெருவிற்கோ பிரச்சினை ஏற்படும் போது, அதனைச் சட்ட முறையில் தீர்த்து வைக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள கிராம நிர்வாக ஊழியர்கள் ஒரு தரப்பிடம் லஞ்சப்பிச்சை பெற்றுக் கொண்டு ஒரு தரப்பாக நடந்து கொள்வது, சான்றிதழ் என்ற பெயரில் கண்மூடித்தனமாக எதையாவது எழுதி கொடுத்து அநீதி இழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதோர் மிக மிக குறைவே.

அரசு ஊழியர்களின் அலட்சிய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் நமக்குள் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, அதனைத் தீர்த்து வைக்க வேண்டிய அரசு ஊழியர்களை விட்டு விடுகிறோம். இது சட்டப்படியும், சம தர்மப்படியும் முற்றிலும் தவறு.

நமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடும் போது, கிராம நிர்வாக அதிகாரி மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட எந்த அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும், நம்மிடம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இன்மையால் யாரும் அவ்வளவாக எடுப்பதில்லை என்பதே அவ்வூழியர்களின் அலட்சியப் போக்கு மற்றும் அட்டூழியங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.

ஆம்! இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவுகள் 119-இன்படி, குற்ற நிகழ்வைத் தடுக்க கடமையுள்ள அரசு ஊழியர் தடுக்க முயலாததால் குற்றம் நிகழ்ந்தால், அக்குற்ற தண்டனையில் பாதி முதல் பத்து ஆண்டுகள் வரையிலும் தண்டனை கிடைக்கும். சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல், அதிலிருந்து தவறும் போது பிரிவு 166 இன்படி, ஒரு வருடம் வெறுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், துன்பம் இழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுச் சட்டத்திற்கு உட்படாத ஆவணத்தைத் தயார் செய்யும் போது பிரிவு 167 இன்படி, மூன்று வருட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என சட்டம் அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு அறிவுறுத்தினாலும், இவைகள் குறித்த அறிமுகம் நமக்கு இல்லாததால் அரசு ஊழியர்களிடம் அல்லோலப்படுகின்றோம்.

எனவே, அறிவோம் அரசு ஊழியர்களின் சட்டக் கடமைகளை! அறிவிப்போம் அவர்களின் சட்ட விரோத செயல்பாடுகளின் விளைவுகளை! அப்படியும் திருந்தவில்லையா, உரிய தண்டனைக்கு ஆளாக்கி, நியாயம் பெறுவோம்; நிம்மதியாய் வாழ்வோம்!